ஈரோடு

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கமும் இறங்கியுள்ளது. 3000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று காலை முதல் மாலை வரை முழுமையாக ஓடாது என அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவுத் தெரிவித்து இன்று கடையடைப்பு நடைபெறுகிறது. இதற்கு தமிழகத்தில் இருக்கும் பல்வேறு தொழில் சார்ந்தோர், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் என பெரும்பாலோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒருசில கட்சிகள் இந்த கடையடைப்பு சுயநலத்துக்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் நடக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டுகின்றன.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், விவசாயிகளுக்கு ஆதரவான இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, லக்காபுரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் எல்.பி.பாலசுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் விவசாயிகளுக்கு ஆதரவான பொது வேலை நிறுத்தத்துக்கு எங்களது இலக்காபுரம் விசைத்தறி நெசவாளர்கள் சங்கத்தினர் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.

கடும் வறட்சியின் காரணமாக அல்லல்படும் விவசாயிகள் நலன் காக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு எங்களது சங்கம் சார்பில் லக்காபுரம் பகுதியில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று காலை முதல் மாலை வரை முழுமையாக ஓடாது” என தெரிவித்துள்ளார்.