சேலம்

சேலத்தில், கல்லூரியில் பைக்கில் வேகமாக சென்றதை கேட்ட சட்டக்கல்லூரி மாணவரை வீட்டுக்கு சென்று கத்தியால் வெட்டியுள்ளார் சக மாணவர். தடுக்க வந்த மற்றொரு மாணவரையும் தலையில் வெட்டியுள்ளனர். இருவரும் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரத்தில் தனியார் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம் உள்பட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் சிலர் கல்லூரி அருகிலேயே அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரி செயல்பட்டதையடித்து மாலையில் வகுப்புகள் முடிந்து மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரின் மகனான 2-ஆம் ஆண்டு மாணவர் சண்முகராஜன் (22) மோட்டார்சைக்கிளில் வெளியே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்ததால் கடலூர் மாவட்டம் மங்களம் பேட்டை ஐயனார் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜசேகரின் மகன் 3-ஆம் ஆண்டு மாணவர் மணிகண்டன் (26), சண்முகராஜனை மெதுவாக செல்லுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப்பார்த்த சக மாணவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் மணிகண்டன் தங்கியிருக்கும் வீட்டுக்கு திடீரென சண்முகராஜன் 10-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்றுள்ளார்.

பின்னர் அவர் மணிகண்டனிடம் தகராறு செய்துள்ளார். அந்த சமயத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சண்முகராஜன் தரப்பினர் கத்தியால் மணிகண்டனின் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளனர். இதிலும் ஆத்திரம் அடங்காத அவர்கள் சைக்கிள் செயினால் மணிகண்டன் முதுகில் அடித்துள்ளனர்.

இதைத் தடுக்க வந்த திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரியை சேர்ந்த கோபிராஜ் மகன் 3-ஆம் ஆண்டு மாணவர் விக்னேஷ்வரனையும் தலையில் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் வெளியே வந்து வீட்டின் கண்ணாடியை உடைத்து விட்டு சென்று விட்டனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மணிகண்டன், விக்னேஷ்வரன் ஆகியோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள்.

இதையறிந்த மணிகண்டனின் நண்பர்கள் மற்றும் 3-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு திரண்டனர்.

இது தொடர்பாக கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் மணி விசாரணை நடத்தி வருகிறார்.