திருநெல்வேலி

தனியார் நிறுவன மேலாளரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை மீட்ட காவல்துறையினருக்கு, அந்தப் பணம் எப்படி வந்தது? என்று வருமானவரித்துறை விசாரிக்காததால் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தனியார் காற்றாலை நிறுவன மேலாளர் பால்ராஜ்.

இவர் ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை மாற்றுவதற்காக நெல்லைக்கு வந்தார். அப்போது ஒரு கும்பல் பால்ராஜ் மற்றும் அவருடன் வந்தவர்களைத் தாக்கி, ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

இதுதொடர்பாக நெல்லை நகர குற்றப்பிரிவு காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி செல்லாத நோட்டுகள் மற்றும் கார், மோட்டார் சைக்கிள், செல்போன்கள் முதலானவற்றை பறிமுதல் செய்யப்ட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகள் நெல்லை நகர காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணம் எப்படி வந்தது? என்று வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தாததால் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை பதிவுச் செய்து, புகைப்படத்துடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாமா? என்று காவலாளர்கள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.