MP, MLA க்களுக்கு லஞ்சம் தரணும்..ரூ4800 கோடி கடன் தாங்க.. ரிசர்வ் வங்கியையே அலறவிட்ட குடியரசு தலைவர் வேட்பாளர்
குடியரசு தலைவர் வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ள காந்தியவாதி ரமேஷ், வாக்காளர்களான பிரதமர், முதலமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் கொடுக்க 4809 கோடி ரூபாய் கடன் கொடுக்கும் படி ரிசர்வ் வங்கியில் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குடியரசு தலைவர் வேட்பாளர் மனுவால் பரபரப்பு
குடியரசு தலைவராவாக உள்ள ராம்நாத் கோவிந்த பதவி காலம் ஆகஸ்ட் மாதத்தோடு நிறைவடையவுள்ளது. இதனையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை தொடங்கியுள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹா எதிர்த்து போட்டியிடவுள்ளார். இதனையடுத்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் தலைவர்களை ஒவ்வொரு மாநிலங்களுக்கு சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்தநிலையில், சுயேட்சையாக குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர் ஒருவர் ரிசர்வ் வங்கியில் கொடுத்துள்ள மனு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் தான் ரிசர்வ் வங்கியில் மனு கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள அந்த மனுவில்,
லஞ்சம் கொடுக்க கடன் வேண்டும்
இந்திய குடிமகனாக வசித்துவரும் நான் கடந்த 15.06.2022 அன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் உயர்திரு P.C மோடி அவர்களிடம் நேரடியாக இந்திய நாட்டின் 16ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்காக அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாட்டிலிருந்து சென்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் நான் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநில, யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் குறைந்த பட்சம் 2405 வாக்குகள் தேவைப்படுவதாக கூறியுள்ளார். எனவே இந்த வாக்குகளை பெற இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் பிரதமர் முதல் முதலமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் என மொத்த வாக்காளர்கள் ஆன 4809 பேர்களுக்கும் பாரபட்சமில்லாமல் குறைந்த பட்சம் தொகையாக தலா 1 கோடி வீதம் அன்பளிப்பாக வழங்கி வாக்குகளை பெற வேண்டிய நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
ஊதியம் இல்லாமல் பணியாற்றுவேன்
எனவே உடனடியாக ரூபாய் 4809 கோடியை நமது சென்னை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் மானிய கடனாகவோ அல்லது தள்ளுபடி கடனாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் மேற்படி வங்கியில் இருந்து வழங்கப்படும் கடனுக்காக இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக 5 ஆண்டுகளுக்கும் மாதந்தோறும் குறைந்தபட்சம் ஊதியமாக வழங்கும் ரூபாய் 5 லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். இதற்கு உத்திரவாதத்திற்காக எனது வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை பான் கார்டு, குடும்ப அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி அட்டை, பாஸ்போர்ட் ஆகிய அனைத்தையும் அசலாக ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்து விட்டு இந்த நாட்டின் குடியரசு தலைவராக பதவியேற்ற 24 மணி நேரத்தில், மது மற்றும் போதை பொருட்கள் இல்லாத இந்தியா, லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத இந்தியாவாக மாற்றி விடுவேன் என உறுதி அளிப்பதாக காந்தியவாதி ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்த மனுவை பார்த்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்