திருவள்ளூர்

செங்குன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் சல்லிக்கட்டுக்கு ஆதரவுத் தெரிவித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

செங்குன்றம், புழல், பாடியநல்லூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் உண்ணாவிரதம், மாட்டு வண்டிப் பேரணி, கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன.

செங்குன்றம் கூட்டுச்சாலை சந்திப்பில், மாற்றுத் திறனாளிகள் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், செங்குன்றம், பாடியநல்லூர், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

செங்குன்றம் வடகரை முதல் புழல் வரை நேற்று மாட்டு வண்டிப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு தமிழர் பண்பாடு வீர விளையாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.வி.ராஜன் தலைமை வகித்தார்.

இந்தப் பேரணியில், ஏராளமான மாட்டு வண்டிகள் சென்றன. அப்போது, “சல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும்” என முழக்கங்களை எழுப்பினர்.

பேரணி நடக்கக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்தும், தடையை மீறி, இப்பேரணி நடைபெற்றது.

இப்பகுதிகளில் உள்ள வியாபாரிகள், தனியார் நிறுவனத்தினர் கடைகளை அடைத்தும், விடுமுறை அளித்தும் சல்லிக்கட்டு போராட்டத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.