Asianet News TamilAsianet News Tamil

வேலூரில் விடிய விடிய பெய்த மழையால் இடிந்து விழுந்த வீடு; குளமாய் மாறிப்போன சாலைகள்;

The house that collapsed in Vellore in the rain
The house that collapsed in Vellore in the rain
Author
First Published Aug 14, 2017, 7:40 AM IST


வேலூர்

வேலூரில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி குளமாய் காட்சியளிக்கின்றன. கருகம்புத்தூரில் வீடு ஒன்று இடிந்து விழுந்து தரை மட்டமானது.

தமிழகத்தில் கடந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயிகள், மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியதால் ஆங்காங்கே பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் வெயிலூர் என்ற அழைக்கப்படும் வேலூரில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் குளிர்ச்சி நிலவுகிறது. மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. வேலூரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய காலை 8 மணி வரை தொடர்ந்தது.

இந்த மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது.

வேலூர் தொரப்பாடி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. கன்சால்பேட்டை, சேண்பாக்கம், கருகம்புத்தூர் பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

கருகம்புத்தூரில் பெய்த மழையினால் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பவானி (53) என்பவரின் கான்கிரீட் வீடு திடீரென இடிந்து விழுந்தது. மழை பெய்யத் தொடங்கியபோதே அவர் குளிர் தாங்க முடியாமல் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தூங்கச் சென்றுவிட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

வாணியம்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக – ஆந்திர எல்லைப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பின. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளநீர் புல்லூர் தடுப்பணையை கடந்து தமிழகத்திற்குள் பாய்ந்து பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த மழையால் வேலூரில் உள்ள மக்கள், விவசாயிகள் என பெருமளவு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios