அமைச்சருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, பணிமனைகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சென்னையில் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்காமலிருக்க மாநகர போலீசாருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

போக்குவரத்து துறை அமைச்சருடன் , ஊதிய உயர்வு, ஓய்வு ஊதியதாரர்களின் பிடித்தம், கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை ஆகியவை உடனடியாக வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்ததை நடத்தினர்.

4 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை அனைத்தும், தோல்வியில் முடிந்தது. இதனால், நாளை முதல் காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்த தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து, இன்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், 5 கட்ட பேச்சு வார்த்தை நடந்தது.

அதில், அனைத்து தொழிற்சங்கத்தினரும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால், அவ்வளவு தொகையை உடனடியாக வழங்க முடியாது. படிப்படியாக வழங்கப்படும் என அமைச்சர் கூறினார். இதனால், இந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை தொடங்க இருந்த வேலை நிறுத்தம் இன்று தொடங்கப்பட்டுவிட்டது.

பல்வேறு மாவட்டங்களில், ஆங்காங்கே பஸ்களை நிறுத்திவிட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிமனையில் இருந்து வெளியே கொண்டு வந்த பஸ்கள், மீண்டும் உள்ளே கொண்டு சென்றுவிட்டுவிட்டனர்.  இதனால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்காமலிருக்க மாநகர போலீசாருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் உள்ள போலீசாரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் கோயம்பேடு, பல்லவன் பணிமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிமனைகளிலும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.