மதுரை சிறையில் கைதி ஒருவர் இறந்ததில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையை சிறைத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் ராஜதானியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது ஊரில் நடைபெற்ற அடிதடி சண்டை வழக்கில் கருப்பசாமியை கைது செய்து மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்களுக்கு இன்று தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கருப்பாசாமியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி சிறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறை அதிகாரிகளுக்கு எதிரான புகாரை கரிமேடு காவல்துறையினர் வாங்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கரிமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதைதொடர்ந்து தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை மறு பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கருப்பசாமியின் மனைவி நாகஜோதி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கருப்பசாமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை சிறைத்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.