Asianet News TamilAsianet News Tamil

செயற்கை மணலை மட்டுமே பயன்படுத்த அரசு ஆணையிட வேண்டும் - கட்டிடப் பொறியாளர்கள்

The government should order only artificial sand - building engineers
The government should order only artificial sand - building engineers
Author
First Published Jun 23, 2017, 8:05 AM IST


தருமபுரி

நீர்வள ஆதாரத்தை பாதுகாத்திட ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணலை மட்டுமே பயன்படுத்த அரசு ஆணையிட்டு மாற்று மணல் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிடப் பொறியாளர்கள் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்துக் கட்டிடப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்துக் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் கலைநாதன் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார்.

இதில் கூட்டமைப்பின் மாநில உயர்மட்ட உறுப்பினர் சந்தானம், தர்மபுரி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க தலைவர் ரவி, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சசிக்குமார், கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “கட்டுமானப்பணிகளுக்குத் தேவையான ஆற்றுமணல் எளிதாகவும், நியாயமான விலையிலும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அதிக அளவில் திறக்க வேண்டும்.

நீர்வள ஆதாரத்தை பாதுகாத்திட ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணலை மட்டுமே பயன்படுத்த அரசு ஆணையிட்டு மாற்று மணல் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்.

கட்டுமானத் துறைக்கு என தனி அமைச்சகம் அமைத்து கட்டுமானப் பொருட்களின் அத்தியாவசிய விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.

பத்திரப்பதிவு துறையில் உள்ள குறைபாடுகளை நீக்கி நடைமுறைக்கு சாத்தியமான விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்க கட்டுமான ஒப்பந்த பணிகளில் பொறியாளர்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத ஒப்பந்த பணிகளை அளிக்க வேண்டும்” என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் கட்டிடப் பொறியாளர்களும், கட்டுமான தொழிலாளர்களும் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான கட்டிடப் பொறியாளர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios