அரியலூர்

தக்கல் முறையில் மின் இணைப்பு வழங்குவதை அரசு கைவிட வேண்டும் என்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் அரியலூரில் நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

அரியலூர் மாவட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கப் பொதுக் குழுக் கூட்டம் அரியலூரில் நடைப்பெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், “திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மருதை ஆற்றின் குறுக்கே ஐந்து இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்.

கதிராமங்கலத்தில் ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தக்கல் முறையில் மின் இணைப்பு வழங்குவதை அரசு கைவிட வேண்டும்.

அரசு ஒதுக்கீட்டின்படி விவசாய மின் இணைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முந்திரி விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்களுக்கு இலவச முந்திரி கன்று வழங்க வேண்டும்.

முந்திரிக்கொட்டை தொழிற்சாலை அமைக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பரமசிவம் உள்பட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.