மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழக அரசு உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி, பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க
தமிழக அரசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. நீட் தேர்வு அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் இன்று வெளியிட்டார். 

இந்தநிலையில், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்து விட்டது என்று கருத்து தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்ட மருத்துவ மாணவர் தரவரிசை பட்டியல் அடிப்படையில் யார் யாருக்கு எவ்வளவு இடம் கிடைக்கும். 

தரவரிசைப் பட்டியலில் உள்ள சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்ட மாணவர்களின் பட்டியலை தனித்தனியாக இன்று பிற்பகல் 2.15 மணிக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.