அண்ணனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த ஆண், வேறு நபர்களோடும் தொடர்பு வைத்திருந்த அந்த பெண்ணை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று ஆடு அறுக்கும் கத்தியால், கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூரைச் சேர்ந்தவர் பெரிய மாரிச்சாமி (39). இவர் திருச்சி மாவட்டம் துறையூரில் துணி வியாபாரம் செய்கிறார். இவரின் மனைவி கொண்டம்மாள் என்ற சுதா (31). இவர்களுக்கு இராமர் (11), இலட்சுமணன் (11), நவநீதகிருஷ்ணன் (6) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

இராமரும், இலட்சுமணனும் இரட்டையர்கள் ஆவர். மூன்று மகன்களும் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர்.

அதே ஊரைச் சேர்ந்தவர் தமனகௌண்டர் மகன் ராஜ் (37). டிராக்டர் ஓட்டுநர். ஆட்டு இறைச்சி வெட்டிக் கொடுக்கும் வேலைக்கும் சென்று வந்தார். அவருடைய மனைவி இராமலட்சுமி. இவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பெரிய மாரிச்சாமி மற்றும் ராஜ் இருவரும் அண்ணன் – தம்பி உறவுமுறை கொண்டவர்கள். வெளியூரில் வியாபாரம் செய்து வந்தார் பெரிய மாரிச்சாமி. எனவே, அவருடைய குடும்பத்தினருக்கு ராஜ் உதவி செய்து வந்தார்.

அடிக்கடி பெரிய மாரிச்சாமி வீட்டுக்கு சென்று வந்ததால் அவருடைய மனைவி சுதாவுக்கும், ராஜூவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இதனையறிந்த இராமலட்சுமி தன்னுடைய கணவர் ராஜைக் கண்டித்தார். மேலும், அவர் இதுகுறித்து கடந்த 2014–ம் ஆண்டு விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

அதன்பின்பு இராமலட்சுமி தனது சொந்த ஊரான விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தத்திற்கு ராஜ் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்டார்.

அப்போதும், ராஜ், சுதா இடையே இருந்த தொடர்பு நீடித்தது. இந்த நிலையில் சுதா வேறு நபர்களுடன் பழகியதாவும் கூறப்படுகிறது. இது தெரியவந்ததால் சுதாவை ராஜ் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவில் கள்ளக்காதலி சுதாவை ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார் ராஜ். சுதாவும் அங்குச் சென்றுள்ளார்.

சுதாவின் தொடர்பு குறித்து, காட்டுப்பகுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வேறு நபர்கள் உடனான தொடர்பை கைவிடுமாறு அதட்டியுள்ளார் ராஜ். அதை சுதா பொருட்படுத்தவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரம் அடைந்த ராஜ், வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியால் சுதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஆடைகள் கலைந்த நிலையில் சுதா காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பற்றி அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனே வந்த விளாத்திகுளம் துணை காவல் சூப்பிரண்டு தர்மலிங்கம், காவல் இன்ஸ்பெக்டர்கள் ராமையா (எட்டயபுரம்), சுப்புலட்சுமி (விளாத்திகுளம் அனைத்து மகளிர்) மற்றும் காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.

பின்னர், சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாசார்பட்டி காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள கோடாங்கிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் பதுங்கியிருந்த ராஜை காவலாளர்கள் கைது செய்தனர்.

“சுதாவுக்கும், எனக்கும் 8 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்தது. நாங்கள் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம். நான் என் மனைவியின் ஊருக்கு சென்ற பின்பு சுதாவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. அவர் வேறு சிலருடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

சுதாவிடம் 3 செல்போன்கள் இருந்தன. அவர் எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டே இருந்தார். இதனை அறிந்த நான் சுதாவைக் கண்டித்தேன். ஆனால், அவர் மற்றவர்களுடன் வைத்திருந்த தொடர்பை கைவிட மறுத்துவிட்டார்.

சம்பவத்தன்று இரவில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் சுதாவை உல்லாசமாக இருக்க அழைத்துச் சென்றேன். அப்போது சுதாவிடம் பல ஆண்களுடன் ஏற்பட்டுள்ள தொடர்பை கைவிடுமாறு கூறினேன். அதற்கு அவர் மறுத்துப்பேசி என்னுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் ஆடு அறுக்கும் கத்தியால், சுதாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன். அப்போது அவர் சத்தம் போடாதவாறு வாயை பொத்திக் கொண்டேன். பின்னர் வெளியூருக்கு தப்பி செல்வதற்காக கோடாங்கிபட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்து நின்றேன். அப்போது அங்கு வந்த காவலாளர்கள் என்னை கைது செய்துவிட்டனர்.” என்று வாக்குமூலத்தில் ராஜ் தெரிவித்து இருந்தார்.