தருமபுரி

தருமபுரி ஆட்சியரகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டுமனையை அபகரித்துவிட்டத்தால் இந்த முடிவெடுத்தேன் என்று காவலாளர்களிடம் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தருமபுரி ஆட்சியர் தலைமைத் தாங்கினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு பெண் ஒருவர் வந்தார்.

திடிரென்று அவர் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்து விரைந்து வந்த அந்த பெண்ணை தடுத்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண், தான் மிட்டாநூல அள்ளியைச் சேர்ந்த சாலம்மாள் என்றும், தனது வீட்டுமனையை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு மிரட்டுவதாகவும், அந்த வீட்டுமனையை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரி தீக்குளிக்க முயன்றேன்” என்று தெரிவித்தார்.

பின்னர் சாலம்மாளை சமாதானப்படுத்திய காவலாளர்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதனையேற்று ஆட்சியரிடம் மனு கொடுத்த சாலம்மாள்ளிடம், ஆக்கிரமித்தது யார்? என்ன பிரச்சனை? என்று தீவிரமாக தர்மபுரி நகர காவலாளர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.