யாதவ கல்லூரி நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு.. ரத்து செய்து மீண்டும் தேர்தலை நடத்திடுக-முதல்வருக்கு கோரிக்கை
மதுரை யாதவ கல்லூரியில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், இந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் நியாயமான முறையில் தேர்தலை நடத்த யாதவர் கல்லூரி யாதவ முன்னாள் மாணவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாதவ கல்லூரி நிர்வாகி தேர்தல்
மதுரை யாதவ கல்லூரி நிர்வாகிகள் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் கே.பி.எஸ் அணி போட்டியிட்டது. பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தால் வாக்கு எண்ணிக்கையானது நீதிமன்ற உத்தரவின் படி ஒரு மாத கழித்து எண்ணப்பட்டது. அப்போது வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக சொஸ்திக் முத்திரை அல்லாத வாக்கு சீட்டுகள் இடம் பெற்று இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யாதவர் கல்லூரி யாதவ முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கேசவன் கூறுகையில்,
பிரிவினையை உருவாக்க திட்டம்
விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி தோல்வியை தமிழகத்தில் தீர்மானிக்கும் மிகப்பெரிய வாக்கு வங்கியாக யாதவர்கள் வாக்கு வங்கி இருக்கும் அதனை பிரிக்க வேண்டும் என்று சில கட்சிகளின் சூழ்ச்சி செய்கிறது. மேலும் துரோகம் செய்யும் வகையில் நவனீத கிருஷ்ணன் என்பவர் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். நெல்லை யாதவர்கள்,ராமநாதபுரம் யாதவர்கள். மதுரை யாதவர்கள் மற்றும் சிவகங்கை யாதவர்கள் என்று பிரிவினையை உருவாக்கி பிரித்தாளும் சூழ்ச்சியை நவநீதகிருஷ்ணன் கையில் எடுத்துள்ளார் .நவநீதகிருஷ்ணன் பிறந்த நாள் விழா மதுரையில் மிகப்பெரிய பொருட்செலவில் நடைபெற்றது. அந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் படைசூழ அவரது சம்மந்தி தலைமையேற்று வெகு விமர்சையாக நடைபெற்றதாகவும் கூறினார்.
கல்லூரி தேர்தலில் முறைகேடு
மேலும் நடைபெற்று முடிந்த கல்லூரி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பொதுக்குழுவை கூட்டாமலேயே தேர்தல் நடைபெற்றுள்ளது, தேர்தல் அறிவிப்பு முறையாக தினசரி நாளிதழில் பிரசுரம் செய்யப்படவில்லை. பொதுக்குழுவைக் கூட்டி அதனிடம் அனுமதி வாங்கிய பிறகு தேர்தல் நடத்துங்கள் என்று எவ்வளவு கூறியும் நிர்வாக அதிகாரி செவி சாய்க்கவில்லை என தெரிவித்தார். இந்தநிலையில் தேர்தல் முடிந்து ஒரு மாத காலத்திற்குப் பிறகு கடந்த 09-09-2023 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம் என இரவு 9 மணிக்கு தீர்ப்பு வருகிறது தீர்ப்பு வெளிவந்த 12 மணி நேரத்திற்குள்ளாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
முத்திரை இல்லாத வாக்கு சீட்டு
நீதிமன்ற உத்தரவுப்படி முடிவு அறிவித்திருந்தால் உண்மையில் பாண்டவர் அணியைச் சேர்ந்த எட்டு நபர்களும் கே.பி.எஸ் அணியைச் சேர்ந்த மூன்று நபர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கே.பி.எஸ் அணியைச் சேர்ந்த எட்டு நபர்களும் பாண்டவர் அணியைச் சேர்ந்த மூன்று நபர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது சமூக வலைதளங்களில் வலம் வரும் முறைகேடாக பதிவான சொஸ்திக் முத்திரை அல்லாத வாக்கு சீட்டுகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த வாக்கு சீட்டுகள் எவ்வாறு வந்தது என தெரியவில்லை என்று நிர்வாக அதிகாரியான ஓய்வு பெற்ற நீதி அரசர் கூறிய ஒரு விடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
யாதவர் கல்லூரியில் நடைபெறும் முறைகேடு குறித்து முதல்வரிடம் தங்களது சமுதாயத்தைச் சார்ந்த பல்வேறு நபர்கள் புகார் அளித்துள்ளனர் எனவே முறையாக சட்டப்படி இதில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நிச்சயம் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என யாதவர் கல்லூரி யாதவ முன்னாள் மாணவர்கள் சங்கம் கேசவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
துரோகம் செய்வது என்பது எடப்பாடி பழனிசாமியின் இயற்கையான சுபாவம்.. டிடிவி. தினகரன்.!