The fight in the municipal office demanding to abandon the transfers of roadside merchants

திருவாரூர்

சாலையோர வணிகர்களை இடமாற்றம் செய்வதை கைவிட்டு, பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தை சாலையோர வணிகர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையோர வணிகர்கள் சங்கத்தினர் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பாண்டியன் தலைமை வகித்தார், நகரத் தலைவர் பிரகாஷ், செயலாளர் ரமேஷ், பொருளாளர் டி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முருகையன் பங்கேற்றுப் பேசினார்.

இந்தப் போராட்ட்த்தில், “நகராட்சி நிர்வாகம் சாலையோர வணிகர்களை இடமாற்றம் செய்வதை கைவிட்டு, பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்.

சாலையோர வணிகர்களின் விற்பனை பிரதிநிதிக் கூட்டத்தை முறையாக நடத்திட வேண்டும்.

அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் நகராட்சி மூலம் கடன்வசதி, வியாபார இடவசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நகராட்சி அலுவலகத்தின் உள்ளே சென்ற போராட்டக்காரர்களிடம் அங்கிருந்த காவலாளர்கள் தடுத்தி நிறுத்தினர். அப்போது நகராட்சி ஆணையர் நாகராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், ஆய்வாளர் இலட்சுமி, உதவி ஆய்வாளர் கமல்ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.