The elephant gave the hassle

கோவையில், காட்டு யானை ஒன்றுக்கு தொந்தரவு அளித்த நபரை ஆக்ரோஷமாக துரத்தி வந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை ஆகிய பகுதியில் 100 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இந்த செங்கல் சூளைகளில் செங்கற்களை வேக வைக்க பனைமரம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பனை மரத்தின் நடுவில் உள்ள கூல் போன்ற பொருளை சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் அடிக்கடி காட்டுயானைகள் செங்கல் சூளைகள் உள்ள பகுதிக்கு வருவது வழக்கம். இவ்வாறு வரும் காட்டு யானைகளை செங்கல் சூளை ஊழியர்கள் சீண்டுவதுடன் பொது மக்களுடன் இணைந்து விரட்டுவதும் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் செங்கல் சூளை பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானையினை செங்கல் சூளை ஊழியர் ஒருவர் சீண்டி விளையாடி தொந்தரவு செய்துள்ளார். ஒற்றை காட்டு யானையை ஊழியர் சீண்டுவதும் , அந்த ஊழியரை காட்டு யானை துரத்தி வருவதையும் அருகில் உள்ள நபர் ஒருவர் செல்போன் மூலம் அந்த காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

மிகுந்த கோபத்துடன் ஊழியரை விரட்டி வரும் காட்டு யானை செங்கல் சூளையின் தாழ்வான பகுதியினை கடக்க முடியாமல் ஆக்ரோஷத்துடன் இருப்பதும் அந்த காட்சிகளில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.