Asianet News TamilAsianet News Tamil

அவசர சிகிச்சை பிரிவுக்குள் அதிரடியாய் புகுந்த குடிகாரன்; கிழிந்த பேண்டை தைத்துக் கொடுக்க கூறி அடம்...

The drunkard enter into icu and asked stitch his tear pant
The drunkard enter into icu and asked stitch his tear pant
Author
First Published Feb 3, 2018, 7:40 AM IST


திருப்பூர்

திருப்பூர் அரசு மருத்துவமனைக்குள் அதிரடியாய் புகுந்த குடிகாரன் ஒருவன், குடிபோதையில் மருத்துவர்களிடம் "கிழிந்த பேண்டை தைத்துக் கொடுக்கும்படி" அடம் பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடித்தபிறகு போதை தலைக்கு வந்தவுடன், போவது அவர்களது சுய சிந்தனை மட்டுமல்ல. மானம், கௌரவத்தை, வாழ்க்கை பாதை, சமுதாயத்தில் அவர்களுக்கு இருக்கும் பேரு என அனைத்தையும் வரதா புயல் போல அடித்து தூக்கிப்போட்டுவிட்டு தான் போகிறது இந்த போதை.

திருப்பூரில் அப்படிதான் ஒருவருக்கு நடந்துள்ளது. தாராபுரம் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை ஒன்று உள்ளது. மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை என்பதால் இந்த மருத்துவமனையில் எப்பவும் நோயாளிகள் வருகை அதிகமாக இருக்கும்.

அது மட்டுமின்றி மாவட்ட எல்லையில் நடைபெறும் விபத்துகளில் சிக்கியவர்களை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவதால் அவசர சிகிச்சை பிரிவு கூட இங்கே பரபரப்பாகவே இருக்கும்.

அதன்படி, நேற்று அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருந்தனர். அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் பையுடன் திடீரென்று அவசர சிகிச்சை பிரிவுக்குள் புகுந்தார்.

அவருடைய பேண்ட் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் பேண்ட் அரைக்கால் கால்சட்டை போன்று இருந்தது.

இதனால் மருத்துவர் பதறித்துடித்துக் கொண்டு விபத்தில் சிக்கி உள்ளாரோ என்று நினைத்து சிகிச்சை அளிக்க முயன்றார். அப்போது அந்த நபர், "எனக்கு மயக்க மருந்து கொடுத்து, கிழிந்த எனது பேண்டை தையுங்கள்" என்றார். மேலும் அந்த வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய செயலும், சொல்லும் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்திருப்பது தெரிந்தது. அருகே சென்ற மருத்துவருக்கும் வாசனை "குப்" என்று தூக்கியுள்ளது.

இதனையடுத்து அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவு அறையில் இருந்து வெளியே போகுமாறு கூறினர். ஆனால், அவர் "கிழிந்த பேண்டை தைத்துக்கொடுத்தால் தான் போவேன்" என்று  கூறி அங்கிருந்து போக மறுத்து விட்டார். பின்னர் நைசாக பேசி அவரை அங்கிருந்து வெளியே அனுப்பினர்.

பின்னர், வெளியே சென்ற அந்த நபர், கூச்சல் போட்டபோது அங்கு 108 அவசர ஊர்தி வந்து நின்றது. இந்த அவசர ஊர்தியைப் பார்த்த அந்த நபர், வண்டியின் அடியில் படுத்துக்கொண்டார். அப்போது, "எனது கிழிந்த பேண்டை தைத்தால்தான் அங்கிருந்து போவேன்" என அடம் பிடித்தார். அவருடைய தொல்லை தாங்க முடியாத வாகனத்தின் ஓட்டுநர்கள், அங்கு சாதாரண உடையில் வந்த காவலரிடம் நடந்ததை கூறினார்.

அந்த காவலர், குடிபோதையில் இருந்த நபரை, மோட்டார் சைக்கிளில் ஏற்றி, வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பேண்டை தைத்து தருவதாக கூறி அங்கிருந்து அழைத்து சென்றார்.

குடிபோதையில் அவசர சிகிச்சை பிரிவுக்குள் புகுந்து கிழிந்த பேண்டை தைத்துக் கொடுக்க கூறி அடம் பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios