தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை இரவு காலமானார். இதையடுத்து, தமிழகத்தில் 7 நாள்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் சீனிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மேனகா, ஈரோடு கோட்டாட்சியர் ஆர்.நர்மதாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல, தமிழ்நாடு பதிவு பெற்ற பிராமணர் சங்கம் சார்பில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோடு எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். இதில், சங்கச் செயலாளர் லட்சுமணன், பொருளாளர் சங்கரராமன், ஈரோடு கிளைத் தலைவர் வேதமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஈரோடு பத்திரிகையாளர்கள் சார்பில், எம்.ஜி.ஆர். சிலை அருகே வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரும் அவரது படத்துக்கு மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தினர்.
அரசு மருத்துவமனை அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மொட்டை அடித்து தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர். ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்புச் சட்டை அணிந்தும், கருப்பு பட்டைகளை அணிந்தும், வாகனங்களில் கருப்புக் கொடி கட்டியும் பலரும் தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்து, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர்கள் தூவி, அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
