நாமக்கல்

தர்மயுத்தம் நடத்தப் போகிறேன் என்று சொன்ன முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தர்மமாக துணை முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது என்று  திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கினார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கட்சித் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா பொதுக் கூட்டம் நேற்று திருச்செங்கோடு வாலரைகேட் கரட்டுப்பாளையம் பகுதியில் நடந்தது.

இந்தக் கூட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாநில துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன், முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, செல்வகணபதி, முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பார்.இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட இளைஞரணி, மாணவரணி மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர் மொளசி முத்துமணி ஆகியோர் சார்பில் வீரவாள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அப்போது அவர், “இந்த பொதுக் கூட்டத்திற்கு வந்திருக்கும் மக்களை பார்க்கும்போது மாநாடு என்றே சொல்ல தோன்றுகிறது. உங்களது எழுச்சி மற்றும் ஆர்வத்தை பார்க்கும் போது தி.மு.க.வை எவரும் அசைக்க முடியாது என எண்ண தோன்றுகிறது.

தி.மு.க.வை யார், யாரோ ஒழித்துவிடலாம், அழித்துவிடலாம் என கங்கணம் கட்டி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களும் கொக்கரித்து கொண்டு இருக்கிறார்கள். உங்களை சாட்சியாக வைத்து சொல்கிறேன். தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட்டுகூட பார்க்கமுடியாது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை பொறுத்தவரை தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலக தலைவர்களை ஒப்பிட்டு பார்த்தால்கூட இதுபோன்ற வரலாறு இருக்க முடியாது.

தமிழகத்தில் தற்போது ஆட்சி நடைபெறவில்லை. காட்சி பொருளாகதான் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. குதிரைபேர சூழ்நிலையில் ஆட்சியை வழிநடத்தி வருகிறார்கள். தற்போது இருண்டகாலம் உருவாகி இருக்கிறது.

தர்மயுத்தம் நடத்தப் போகிறேன் என்று சொன்ன முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தர்மமாக துணை முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அவர் சொன்ன தர்மயுத்தம் நடைபெறவில்லை.

தற்போது தமிழகத்தில் ஊழலும், ஊழலும் இணைந்துள்ளது. கடுமையான சூழ்நிலையில் தமிழகம் அகப்பட்டு கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தை கேள்விக்குறியாக்கி உள்ளனர்.

இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதா? தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர் இருந்தனர். இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து 233 ஆக குறைந்துள்ளது.

இதில் மெஜாரிட்டி வேண்டுமானால் 116 எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த 19 பேருடன் நின்றுவிட்டதா? மேலும் ஒவ்வொருவராக சேர்ந்து வருவதாக செய்தி வருகிறது. இந்த மேடைக்கு வருவதற்கு முன்பு எனக்கு கிடைத்த செய்திப்படி 26 பேர் இருப்பதாக தெரிகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டம் ஒன்றை கூட்டினார். அதில் 30 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் போகவில்லை. 56 பேர் அவருக்கு ஆதரவு தரவில்லை. அப்படி என்றால் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் 83 பேர்தான்.

ஆனால் தி.மு.க.வை எடுத்துக் கொண்டால் 89 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சியினரை சேர்த்தால் மொத்தம் 98 எம்.எல்.ஏக்கள் உள்ளோம்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை வரும், நாளை மறுநாள் வரும் என சொல்கிறார்கள். கண்டிப்பாக இந்த அரசு மீது விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தே தீரும் அவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரும்போது, அரசுக்கு ஆதரவாக 83 எம்.எல்.ஏ.க்களும், எதிராக 150 எம்.எல்.ஏக்களும் வாக்களிப்பார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஆட்சி நிர்வாகம் எப்படி நடத்த முடியும்? நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்? என்பதை எண்ணிப் பார்த்துதான், தி.மு.க. சார்பிலும், இந்த ஆட்சி மெஜாரிட்டியை இழந்துவிட்டது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என நான் கவர்னருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை அதற்கு எந்த பதிலும் இல்லை.

நேற்று (நேற்று முன்தினம்) தி.மு.க.வுடன் இணைந்து செயல்படும் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இன்று (நேற்று) தி.மு.க. எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து இதுகுறித்து மனு கொடுத்துள்ளனர்.

ஊழலை ஒழிப்பேன் என முழங்கிவரும் பிரதமர் மோடி, ஏன் இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார். அதைத்தான் நான் தொடக்கத்தில் சொன்னேன். கட்டபஞ்சாயத்து நடைபெறுகிறது என்று. இது வெட்கக்கேடானது.

மராட்டிய மாநிலத்தில் தனக்கு இருந்த மூன்று நிகழ்ச்சிகளை கவர்னர் ரத்து செய்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் சேர்த்து வைத்தார். இருவரது கையையும் சேர்த்து வைத்தார். பொதுவாக பதவி ஏற்கும் நபர்கள்தான் கவர்னருக்கு பூச்செண்டு கொடுப்பது வழக்கம். ஆனால் அவர்களுக்கு கவர்னர் பூச்செண்டு கொடுத்தார். இதுதான் கவர்னரின் வேலையா? கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நிலைக்கு கவர்னர் போய் உள்ளார்.

நீட் தேர்வு, விவசாயிகள் தற்கொலை போன்றவற்றில் தோல்வியை தழுவிய இந்த ஆட்சி தொடரவேண்டுமா?. ஓ.பன்னீர்செல்வம் 2 நிபந்தனைகளை விதித்தார். அதில் ஒன்று சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கவேண்டும். மற்றொன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதலமைச்சர் பதவியை வகித்து வந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் பதவி பறிபோன பிறகுதான் நீதிவிசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நீதி விசாரணை நடத்தப்படும் என்றார். ஆனால் எந்த நீதிபதி விசாரிப்பார் என்று சொல்லப்பட்டதா? இதன்மூலம் ஊரை ஏமாற்றி வருகிறார்கள்.

மத்தியஅரசு சி.பி.ஐ., அமலாக்கத்துறையை வைத்து தமிழக ஆட்சியாளர்களை மிரட்டி வருகிறது. இவர்கள் மத்திய அரசிடம் மண்டியிட்டு, சரணாகதியாக இருந்து வருகிறார்கள். தமிழக அரசை காப்பாற்ற நீங்கள் தயாராக இருக்கவேண்டும். ஆண்டு கணக்கில் அல்ல. மாத கணக்கில் அல்ல. நாள் கணக்கில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவாகப் போகிறது” என்று அவர் பேசினார்.

இதில் திருச்செங்கோடு நகர செயலாளர் நடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜிஜேந்திரன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் சுகந்தி மணியம், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜமாணிக்கம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், மகளிரணியினர் உள்பட பலர் திரளாக பங்கேற்றனர்.