அரியலூர்

விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசைக் கண்டித்து அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு வருகிற 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தா.பழூரில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் அனைத்துக் கட்சி மற்றும் விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் உலகநாதன், பா.ம.க. தொகுதிச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், “விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசின் அலட்சியப் போக்கை கண்டிப்பது,

தா.பழூர் ஒன்றியத்தில் விவசாயிகள் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டிப்பது,

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்க வேண்டிய தொகையினை உடனடியாக வழங்க வலியுறுத்துவது,

அனைத்துக் கட்சிகளின் சார்பில் வருகிற 11-ஆம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது” போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சக்கரவர்த்தி, த.மா.கா வட்டாரத் தலைவர் அன்பழகன், தே.மு.தி.க. ஒன்றியச் செயலாளர் அறிவழகன், ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கொளஞ்சியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் தங்கராசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் அபிமன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் தங்கராசு, திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.