The Delhi Patiala Court has imposed a ban on Karti Chidambaram in the Aircel-Maxis case

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஏப்ரல் 16ம் தேதி வரை கைது செய்ய சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக அந்நிய முதலீட்டை பெற்றுதருவதற்காக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த சிபிஐ, கடந்த பிப்ரவரி 28ம் தேதி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனர்.

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது முதல் நீதிமன்ற காவலில் வைத்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் சி.இ.ஓ இந்திராணி முகர்ஜி, அந்நிய முதலீட்டை பெறுவதற்காக கார்த்தி சிதம்பரத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் கடந்த 12ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதி, மேலும் 12 நாட்களுக்கு அதாவது 24ம் தேதி வரை திஹார் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டதை அடுத்து கார்த்தி சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையடுத்து காவல் முடிவடைந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. 

இந்நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஏப்ரல் 16ம் தேதி வரை கைது செய்ய சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.