இரட்டை இலை விவகாரத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த சுகேஷ் சந்திரசேகரின் மனுவை டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவித்த போது ஒ.பி.எஸ் அணியும், சசிகலா அணியும் தங்களுக்கு பிரதான சின்னமான இரட்டை இலை சின்னத்தை தரக்கோரி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.

இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. மேலும் இரு அணிகளுக்கு வெவ்வேறு சின்னங்களை வழங்கியது. தொடர்ந்து பணபட்டுவாடா காரணமாக இடைத்தேர்தல் ரத்தானது.

இதையடுத்து இரட்டை இலையை பெற டிடிவி.தினகரன், இடை தரகர் சுகேஷ் சந்திரா மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, 2 பேரையும் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இதைதொடர்ந்து இரட்டை இலை விவகாரத்தில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரா 2 முறை ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து டெல்லி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 3 வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சுகேஷ் ஜாமின் கேட்டு டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் மீண்டும் கோரியிருந்தார். ஆனால் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.