காஞ்சிபுரம்

தமிழ்நாடு ஓய்வூதியர்களுக்கு எட்டாவது ஓய்வூதிய மாற்றத்தினை உடனடியாக முழு பணப் பயனுடன் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செங்கல்பட்டில் நடந்த பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செங்கல்பட்டில் பேரவைக் கூட்டத்தை நடத்தினர்.

இந்தக் கூட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் தலைமைத் தாங்கினார். செங்கல்பட்டு வட்டத் தலைவர் வேதகிரி வரவேற்றார். பொதுச் செயலாளர் கே.ராகவன் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

மாவட்டச் செயலாளர் ய.சீத்தாராமன் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.லெனின் வாழ்த்திப் பேசினார். இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.சுகுமாரன் சிறப்புரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில், “தமிழ்நாடு ஓய்வூதியர்களுக்கு எட்டாவது ஓய்வூதிய மாற்றத்தினை உடனடியாக முழு பணப் பயனுடன் 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும்,

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் வழங்க வேண்டும்,

மூத்த குடிமக்கள் அனைவருக்கும் உடனடியாக இலவச பேருந்து பாஸ் வழங்க வேண்டும்” உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் இறுதியில் எம்.ஜெகதீசன் நன்றித் தெரிவித்தார்.