The court will pronounce the verdict - the people who conducted the special puja to mariamman ...
அரியலூர்
மணல் குவாரிக்கு நிரந்த தடையை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று அரியலூரில் மாரியம்மனுக்கு கூழ் வார்த்து, அன்னதானம் போட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றிய பகுதியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் கடந்த மாதம் தமிழக அரசு புதிய மணல் குவாரி தொடங்க நடவடிக்கை மேற்கொண்டது.
இதுகுறித்து தகவலறிந்த திருமானூர் ஒன்றிய மக்கள் கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழு உருவாக்கி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து அரசு அதிகாரிகள் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மக்களின் கருத்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி பலத்த காவல் பாதுகாப்புடன் அரசு மணல் குவாரி தொடங்கியது. இதையறிந்த மக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். பின்னர் பல்வேறு போராட்டங்கள், மூன்று நாட்கள் கையெழுத்து இயக்கத்தையும் நடத்தினர்.
அப்போது கையெழுத்து பெறப்படும் படிவங்கள் ஆளுனர், தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 9-ஆம் தேதி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தொடங்கப்பட்ட புதிய மணல் குவாரிக்கு ஜூன் 5-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், மணல் குவாரிக்கு நிரந்தர தடை உத்தரவு கிடைக்க வேண்டும் என்று கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழு மற்றும் மக்கள் இணைந்து திருமானூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் தனபால், முருகானந்தம், கைலாசம், சீமான், திருவேங்கடம், மணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
