மதுரை

ஃப்ளக்ஸ் போர்டு கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலியானதில் சட்டவிரோதமாக நடந்த முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பாத்திமா, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அட்ந்த மனுவில், “தமிழகத்தில் அனுமதி பெறாமல் பொது இடங்களில் ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 19–ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்காக தஞ்சாவூர் அம்மாபேட்டை கிராமத்தில் காவல் நிலையம் எதிரிலேயே மணியரசன், கர்ணன், சத்தியராஜ் ஆகியோர் ஃப்ளக்ஸ் போர்டுகளை வைத்தனர்.

அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மரின் மீது ஃப்ளக்ஸ் போர்டின் இரும்பு கம்பி சாய்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அனுமதியின்றி ஃப்ளக்ஸ் போர்டு வைக்கும்போதே காவல் அதிகாரிகள் தடுத்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. இந்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு அமைச்சர் சென்று பார்வையிட்டார். பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 இலட்சம் நஷ்டஈடு வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது சட்டவிரோதம். அவர்களின் கட்சி நிதியில் இருந்து நஷ்டஈடு வழங்காமல் அரசின் நிதியை வழங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுபோன்ற உத்தரவை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

அனுமதி பெறாமல் ஃப்ளக்ஸ் போர்டுகளை வைப்பதை தடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

“இந்த மனு குறித்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புங்கள்” என்று, “விசாரணையை அடுத்த மாதம் 6–ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.