நாமக்கல்,
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 425 பெண்கள் உள்பட 778 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
கால்நடைகளுக்கு தீவனம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு காவிரிநீர் கிடைக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்துவதுடன் ரூ.300 சம்பளம் வழங்க வேண்டும்.
ஏற்கனவே செய்த வேலைக்கு ரூ.203 வீதம் சம்பளம் வழங்க வேண்டும்.
மக்களாட்சி முறையிலான கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் நுழைவு தேர்வினை ஏற்க கூடாது.
படித்த இளைஞர்களுக்கு வேலை செய்ய வாய்ப்பு வழங்கும் வகையில் அனைத்து துறை காலி பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம், காதல் திருமணத்தால் ஏற்படும் ஆணவக் கொலை போன்ற தீண்டாமை கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
நாமக்கல்லில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமைத் தாங்கினார்.
நிர்வாகிகள் ஜெயமணி, சிங்காரம், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனையொட்டி நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலாளர்கள் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 23 பேரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சில இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
சாலைமறியலில் ஈடுபட முயன்றதாக திருச்செங்கோட்டில் 31 பேரும், பள்ளிபாளையத்தில் 97 பேரும், வெப்படையில் 47 பேரும், குமாரபாளையத்தில் 46 பேரும், நாமகிரிப்பேட்டையில் 63 பேரும், எலச்சிபாளையத்தில் 250 பேரும், பரமத்தியில் 25 பேரும், ராசிபுரத்தில் 170 பேரும், புதுச்சத்திரத்தில் 16 பேரும், கொல்லிமலையில் 10 பேரும் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் 425 பெண்கள் உள்பட 778 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
