Asianet News TamilAsianet News Tamil

அரளி விதையை தின்று கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி... ஆட்சியரகத்தில் உறவினர்கள் கதறி அழுது தர்ணா...

The college student committed suicide in theni...relatives protest
The college student committed suicide in theni...relatives protest
Author
First Published Apr 7, 2018, 11:38 AM IST


தேனி

தேனியில், ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்றியதால் கல்லூரி மாணவர் அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவருடைய உறவினர்கள் ஆட்சியரகத்தில் கதறி அழுதபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் கோவில் அருகில் கடந்த டிசம்பர் மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட பகுதியில் சிலர் மீண்டும் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தனர். 

கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்ற நிலையில் அங்கு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டுள்ளது.

அதேபகுதியில் ராஜூ என்பவருடைய மகன் அனீஸ்குமார் (19) வசித்து வருகிறார். இவர் வீரபாண்டியில் உள்ள கலை கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலையில் அனீஸ்குமார் அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றார். 

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அவருடைய உறவினர்கள் தேனி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். 

இதனிடையே அனீஸ்குமார் சிகிச்சைக்காக வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் அனீஸ்குமாரின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியரின் அறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கதறி அழுததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் தேனி காவல் ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் காவலாளர்கள் தர்ணா செய்தவர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்களில் சிலர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரனை சந்தித்து முறையிட்டனர். 

ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் கதறி அழுதபடியே ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios