சேலம்:  8 வழி பசுமை விரைவுச் சாலைக்காக பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளனர். 100-க்கு 4 அல்லது 5 பேர்  மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதற்கு சேலம் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் முதலமைச்சர் அப்பட்டமான பொய் சொல்வதாக கூறியுள்ள கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அபிராமன், விவசாயிகளின் நிலைமையை விளக்கி குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு பதிவு தபால் அனுப்பப்போவதாக கூறினார். 

விவசாயிகள் கேள்வி

8 வழிச்சாலை ஏழைகளுக்கான சாலையா என்று முதல்வருக்கு விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே சாலை உள்ளதே என பூலாவரி விவசாயிகள் கூறியுள்ளனர். அரசு உள்நோக்கத்துடன் இந்த   8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

சேலம் மக்கள் கண்ணீருடன் கதறல்

சேலம் பூலாவரி கிராமத்தில் 8 வழிச்சாலைக்கு விவசாய நிலம் எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 8 வழிச்சாலைக்கு தனது 5 ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் எடுக்க முயற்சி என்று விவசாயி குற்றம்சாட்டியுள்ளார். தாங்கள் யாரும் லஞ்சம் வாங்கி வாழ்ந்த குடும்பம் அல்ல, பாடுபாட்டு வாழ்பவர்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர். விவசாயிகளே முன்வந்து நிலம் தருவதாக முதல்வர் கூறுவது பொய் என்று பூலாரி மக்கள் தெரிவித்துள்ளனர். விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் உயிரை விடுவதை தவிர வேறுவழியில்லை என்று தெரிவித்தனர். 

 

அதேபோல் தாங்கள் பாடுபட்டு உருவாக்கியுள்ள நிலத்தை எடுக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலத்தை எடுத்தால் வாழ்க்கையே பறிபோகும் என்று கண்ணீருடன் கதறி வருகின்றனர். தங்கள் நிலத்தையும், வீட்டையும் எடுத்தால் அங்கேயே உயிரை விட்டுவிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.