The Chief Minister gave Rs 1 crore to the fund

கொள்ளையனைப் பிடிக்க சென்றபோது துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க சென்ற போது காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரியபாண்டியை சுட்டது யார் என்ற மர்மம் நீடித்து வந்த நிலையில், ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில், பெரியபாண்டியன் உடன் சென்ற காவல் ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியில் இருந்துதான் குண்டு பாய்ந்துள்ளது என்றும், முனிசேகர் தவறுதலாக சுட்டதால்தான் பெரியபாண்டி உயிரிழந்ததாகவும் கூறியிருந்தது.

இந்த நிலையில், நகை கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம், ராஜஸ்தான் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். நாதுராமை தமிழகம் கொண்டு வர தமிழக போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.

உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசும், பெரியபாண்டியன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், உயிரிழந்த காவல் ஆய்வாளர் குடும்பத்தினர் இன்று வந்தனர். அவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரியபாண்டியனின் மனைவியிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

அப்போது, உயிரிழந்த பெரியபாண்டியின் இரண்டு மகன்கள், மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.