நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், தேவையற்ற வங்கி சீர்திருத்த கொள்கைகளை கைவிடவேண்டும், வாராக்கடனை உடனடியாக வசூலிக்கவேண்டும், வாராக்கடன் பளுவை வாடிக்கையாளர்கள் மீது வங்கிகள் திணிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும்  வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி சென்னையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வங்கி ஊழியர்கள் தொடர்புடைய 9 சங்கங்கள் இணைந்து கலந்து கொண்டன. 

இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், இந்த போராட்டத்தில் 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும், தமிழகத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர்  கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். 

சென்னையில் மட்டும் 4,500 வங்கி கிளைகள் என தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 300 வங்கிகள் நேற்று மூடப்பட்டதாகவும், வங்கி ஊழியர்கள் போராட்டம் வெற்றி பெற்றிதாகவும் தெரிவித்தார். 

இதனால் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 40 லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்ததாகவும், தமிழகத்தை பொறுத்தமட்டில் ரூ.7 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான சுமார் 12 லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.