தமிழகத்திற்கு கர்நாடக அரசு தர வேண்டிய காவிரி நீர் குறித்து காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தி தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக்குழுவினர் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை வகித்தார். காவிரியில் தமிழகத்திற்குரிய உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் பேசினார்.

இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், இந்திய ஜனநாயக கட்சி ஒன்றிய செயலாளர் திருமாறன், மக்கள் உரிமை கூட்டமைப்பு ஆலோசகர் ராஜ்குமார், தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் குழ.பால்ராசு மற்றும் பூதலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

“தமிழகத்திற்கு கர்நாடக அரசு தர வேண்டிய காவிரி நீர் குறித்து காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தி தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

தற்போது உச்சநீதிமன்றத்தில் காவிரி நீர் குறித்து வழக்கை விசாரித்து வரும் சிறப்பு அமர்வில் தமிழக அரசு காவிரியில் நமக்குரிய உரிமையை எடுத்து கூறி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதுகுறித்து பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியது:

“காவிரி நீர் வழக்கை உச்சநீதிமன்றம் சிறப்பு அமர்வு தொடர்ந்து விசாரித்து வருகிறது. கர்நாடக தரப்பில் வாதிடும் வழக்கறிஞர்கள், ஆண்டுக்கு 192 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு தவறு என்றும், தமிழ்நாடு கர்நாடக எல்லையான பில்லிகுண்டுவில் இருந்து மேட்டூர் அணை வரை 60 டி.எம்.சி. மழைநீர் கிடைப்பதால் அதை கழித்து 132 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு திறக்க உச்சநீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்றும் வாதாடுகின்றனர்.

தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. நீர் போதாது. இதை அதிகரித்து தர உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுதான் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் வாதிடும் வழக்கறிஞர் உமாபதி கர்நாடகம் புதிய அணை கட்டிக் கொள்ளலாம். தமிழக அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இவருடைய கருத்து கர்நாடகம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசின் நிலைபாட்டிற்கு எதிரானது. இந்த வழக்கில் தமிழக அரசு உரிய அக்கரை காட்டவில்லை என்ற ஐயம் எழுகிறது.

கர்நாடக முதல் மந்திரியும், பொதுப்பணித்துறை மந்திரியும் உரிய வல்லுனர்களை அவ்வப்போது டெல்லிக்கு அழைத்து சென்று கர்நாடகம் சார்பில் வாதிடும் வழக்கறிஞர்கள் குழுவை கூட்டி வேண்டிய தகவல்களை அளித்து விவாதித்து புதிய உத்திகளை வகுக்கின்றனர்.

அத்தகைய முயற்சியை தமிழக அரசு எடுக்காதது வேதனை அளிக்கிறது. தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் வல்லுனர்களை அழைத்து சென்று காவிரி வழக்கில் வாதாடும் தமிழக வக்கீல்களுக்கு உரிய தகவல்களை தெரிவித்து வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும்.

கச்சா எண்ணெய் எடுக்கக்கூடாது என கதிராமங்கலம், நரிமணம் போன்ற பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னும் 110 இடங்களில் கச்சா எண்ணெய், எரிவாயு எடுக்க ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. டெல்டா பகுதியை போர் களமாக மத்திய அரசு மாற்றி வருகிறது. அனைவரும் அறவழியில் போராடினால் மட்டுமே நமது உரிமையை காக்க முடியும்” என்று அவர் கூறினார்.