ரூ. 20 இலட்சம் செலவில் கட்டப்பட்ட அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் தற்போது சேறும் சகதியுமாக மாறி வீணாகப் போனது. 

திருவள்ளூர் இரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் ரூ. 20 இலட்சம் செலவில் கட்டப்பட்டது.

சென்னை, புறநகர், அரக்கோணம், திருத்தணி என அனைத்துப் பகுதிகளிலும் இருந்து திருவள்ளூர் இரயில் நிலையம் வரும் மக்கள் இப்பேருந்து நிலையத்தில் இருந்து தான் பேருந்து மூலம் திருவள்ளூர் நகருக்குச் செல்ல வேண்டும்.

இந்த பேருந்து நிலையத்தின் தரைப் பரப்பானது சிமென்டால் போடப்படாமல் செம்மண், ஏரி மண்ணால் சமன் செய்யப்பட்டுள்ளது.

இதனால் மழை பெய்யும் போதெல்லாம் இப் பேருந்து நிலையத்தில் சேறும், சகதியுமாகி பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும், அவசரத்தில் பேருந்தைப் பிடிக்க வேகமாகச் செல்லும் பயணிகள் சேற்றில் வழுக்கி விழுந்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே பயணிகளின் நலன் கருதி இந்த பேருந்து நிலையத்தின் தரைப்பகுதியில் சிமென்ட் காரை அமைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.