திருவெறும்பூர் அருகே ஹெல்மெட் சோதனையின் போது இன்ஸ்பெக்டர் காமராஜால் எட்டி உதைக்கப்பட்டு பலியான உஷா, உயிரிழந்த போது கர்ப்பமாக இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.   தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த சூலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா.

இவர் திருச்சி சுந்தர் நகரை சேர்ந்த உஷா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். உஷாவின் தோழியின் திருமண நிச்சயதார்த்தில் பங்கேற்க  கடந்த 7-ம் தேதி உஷாவுடன் ராஜா, பைக்கில் திருச்சிக்கு சென்றார். அப்போது துவாக்குடி சுங்கச்சாவடி அருகே திருவெறும்பூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஹெல்மெட் அணியாமல் வந்ததால் இவர்களை போலீசார் மறித்தனர். தம்பதியாக இருப்பதை பார்த்ததும், ஒரு போலீஸ் கிளம்பி செல்லும்படி சொல்லியிருக்கிறார். இதனால், ராஜாவும் புறப்பட்டு சென்றிருக்கிறார்.

ஆனால், இன்ஸ்பெக்டர் காமராஜ் திடீரென இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று என்னிடம் கேட்காமல் பைக்கை எப்படி நீ எடுத்துக் கொண்டு போகலாம் எனக்கேட்டு ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டே பைக்கில் உட்கார்ந்திருந்த உஷாவை இன்ஸ்பெக்டர் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.

இதில் உஷா தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த உஷா பரிதாபமாக பலியானார். உடனே, அருகில் இருந்தவர்கள் உஷாவின் சடலத்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சம்பவத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மாஜிஸ்திரேட் ஷகீலா வீட்டில் ஆஜர்படுத்தி உடனடியாக மத்திய சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில் காவலர் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷா, கர்ப்பிணி இல்லை என தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த உஷாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் வெளிவந்துள்ள அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த அறிக்கையில் உஷா கர்ப்பிணி இல்லை என்றும், மாறாக அவரது வயிற்றில் சிறிய அளவிலான நீர்க்கட்டி ஒன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசியுள்ள திருச்சி எஸ்.பி., கல்யாண் பிரேத பரிசோதனையில் உஷா கர்ப்பிணி இல்லை என்பது தெளிவாகியுள்ளதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் உஷா உயிரிழந்த வழக்கில் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய இறந்த உஷாவின் கணவர் ராஜா, திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை இல்லை என்பதால் அதற்கான மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தான் கர்ப்பமாக இருப்பதாக உஷா என்னிடம் கூறினாள். எனவே அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து வந்தேன். ஆனால் தற்போது மருத்துவர்கள் உஷா கர்ப்பிணி இல்லை என பரிசோதனை அறிக்கை வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

நாங்க எதைக் கண்டோம். அவளையே பறிக்கொடுத்துட்டு நிற்கிறோம். அதிகாரம் இருப்பதால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், செய்வார்கள் என கண்ணீருடன் கதறுகிறார்.