The bull must open the sand quarry - more than a dozen villagers call for tahsildar ...
கடலூர்
கடலூரில், வெள்ளாற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க வேண்டும் என்று பத்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம், திருமுஷ்ணம் அருகே பூண்டி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது.
ஆனால், மாட்டு வண்டி மற்றும் டிராக்டர்களில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளதால் கட்டிட கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும், தி.மு.க., கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளும், பல்வேறு தொழிற்சங்கங்களும் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இதுவரை வெள்ளாற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மதகளிர்மாணிக்கம், எசனூர், குணமங்கலம், பூண்டி, கள்ளிப்பாடி, வல்லியம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று காலை திருமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் முன்பு திரண்டு வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருமுஷ்ணம் காவல் ஆய்வாளர் பீர்பாஷா விரைந்து வந்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது கிராம மக்கள், "மாட்டு வண்டி மணல் குவாரி குறித்து கோவில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த வந்ததாக தெரிவித்தனர். அதற்கு ஆய்வாளர், உரிய அனுமதியோ, முன்அறிவிப்போ இன்றி கூட்டம் நடத்தக் கூடாது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து கிராம மக்கள் அனைவரும் தாலுகா அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் அந்தோணிராஜிடம், வெள்ளாற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையேற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
