சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அருகே ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் பெண் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமாஞ்சோலை  தனியார் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் தவமணி. இவரது மனைவி லோகம்மாள். 
இவர்களிடம் ஆடு, மாடுகள் அதிகமாக உள்ளன. அந்த ஆடு, மாடுகளை அருகில் உள்ள நிலங்கள், கண்மாய் பகுதியில் தினசரி லோகம்மாள் மேய்ப்பது வழக்கம். 

இந்நிலையில், ஏனாதியைச் சேர்ந்த கருப்பையா மகன் முத்துமணி என்பவர் குத்தகை எடுத்து பராமரித்து வரும் தரிசு நிலத்தில் ஆடு, மாடுகளை லோகம்மாள் மேய்த்துள்ளதாக தெரிகிறது. 

இதுதொடர்பாக லோகம்மாளுக்கும் முத்துமணிக்கும் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. 
இதைதொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்ற லோகம்மாள் இரவு 8 மணி வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தவமணி போலீசில் புகார் செய்துள்ளார். 

இது தொடர்பாக முத்துமணியிடமும் விசாரித்துள்ளனர். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என மறுத்துவிட்டார். 
மானாமதுரை டிஎஸ்பி சங்கர் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் தேடுகையில் ஏனாதி கண்மாயின் உட்புறம் சாக்குமூட்டையில் கொலை செய்து போடப்பட்ட லோகம்மாளின் உடல் மீட்கப்பட்டது.

மோப்பநாய் அங்கிருந்து முத்துமணியின் வீடு வரை வந்து நின்று விட்டது. போலீசார் வருவதை பார்த்த உடன் முத்துமணி தப்பியோடிவிட்டார். 
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.