the barrier faces by the one man commission to start investigation

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில், 13 அப்பாவி பொது மக்களை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், தமிழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பலர் போலீசார் நடத்திய இந்த தாக்குதலில் காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனை தொடர்ந்து மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தது. இந்த பிரச்சனை ஏற்படுத்திய கடும் தாக்கத்தை உணர்ந்த தமிழக அரசு, நேற்று ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைக்க நிரந்தர ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.

தூத்துக்குடி மக்களின் போராட்டம் இதனால் ஒரு வழியாக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இந்த போராட்டத்தில் அப்பாவி மக்கள் உயிர் பறிபோக யார் காரணம்? என அறிய வேண்டியதன் அவசியத்தை மக்கள் வலியுறுத்தியதன் பேரில், தமிழக அரசு ”நீதிபதி அருணா ஜெகதீசன்” தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தது.

ஆனால் அந்த ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்குவதில் சில தடங்கல்கள் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த ஆணையத்துக்கு தேவையான அதிகாரிகள், அலுவலகம் என எதுவும் இதுவரை அமைத்துத் தரப்படவில்லை. எந்த வசதியும் செய்து தரப்படாததால் விசாரணையை இன்னும் தொடங்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர் இதில் சம்பந்தப்பட்டவர்கள்.

ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைக்காக போராட மக்களுக்கே உரிமை இல்லையா? இத்தனை உயிர்களை பறிக்கும் உரிமையை அரசுக்கு யார் தந்தது? இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் இருக்கும் உண்மை காரணம் என்ன? என பல கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும் என்றால் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை விரைவில் நடத்தப்பட வேண்டும். என்பதே மக்கள் தரப்பில் இருந்தும் ,சமுதாய ஆர்வலர்களிடம் இருந்தும் வரும் ஒரே கருத்து.