Asianet News TamilAsianet News Tamil

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி திருச்சியில் இரயில் மறியல் போராட்டம் நடத்திய 175 பேர் கைது...

The arrest of 175 people who peotest in train strike in Trichy
The arrest of 175 people who peotest in train strike in Trichy
Author
First Published Jan 29, 2018, 10:13 AM IST


திருச்சி

சம்பா பயிரை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று திருச்சியில் இரயில் மறியல் போராட்டம் நடத்திய அரசியல் கட்சியினர், விவசாயிகள் 175 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற கர்நாடக மாநிலத்தில் இருந்து உடனடியாக குறைந்த பட்சம் 15 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி ஜனவரி 28-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் இரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இந்தப் போராட்டத்திற்கு தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

அதன்படி, திருச்சி சந்திப்பு இரயில் நிலையத்தில் இரயிலை மறிப்பதற்காக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் நேற்று காலை வழிவிடுவேல் முருகன் கோவில் அருகில் திரண்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். விவசாய சங்க தலைவர்கள் இந்திரஜித், அயிலை சிவசூரியன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), ஐயாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்), விசுவநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்),

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வெல்ல மண்டி சோமு, சேரன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், மகிளா காங்கிரஸ் செயலாளர் ஜெகதீஸ்வரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருள் உள்பட ஏராளமானவர்கள் சந்திப்பு இரயில் நிலையம் நோக்கிச் சென்றனர்.

அவர்களை இரயில் நிலையத்தின் முன்பகுதியில் ‘பேரிகாட்’ அமைத்து காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர். இரயில் நிலையம் வரை செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் காவலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பேரிகாட்களை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றவர்களை காவலாளர்கள் பிடித்து தள்ளியதால் காவலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

"கருகும் பயிரை காப்பாற்ற கர்நாடக அரசே தண்ணீர் திறந்து விடு, தண்ணீருக்காக போராடும் விவசாயிகளை காவல் துறையே தடுக்காதே" என்பது உள்பட பல்வேறு முழக்கங்களை எழுப்பினார்கள்.

இந்நிலையில் மாநகர காவல் துணை ஆணையர்கள் சக்திகணேசன், மயில்வாகனன், இரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆனி விஜயா ஆகியோருடன் ஜி. ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ராமகிருஷ்ணன் ‘நாங்கள் நடத்துவது இரயில் மறியல் போராட்டம். சாலை மறியல் அல்ல. இந்த போராட்டம் பற்றி ஏற்கனவே முறைப்படி அறிவித்து விட்டுதான் வந்திருக்கிறோம். எனவே, இரயில் வரை செல்ல அனுமதிக்க வேண்டும். எங்கள் போராட்டம் அறவழியில் தான் நடைபெறும்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து விவசாய சங்க தலைவர்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் இரயில் நிலையத்திற்குள் செல்ல காவலாளர்கள் அனுமதித்தனர்.

இதனடிப்படையில் ஜி. ராமகிருஷ்ணன் உள்பட முக்கிய நிர்வாகிகள், விவசாய சங்க தலைவர்கள் மட்டும் இரயில் நிலையத்திற்குள் சென்று முதலாவது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது ராமகிருஷ்ணன் உள்பட 175 பேரை காவலாளர்கள் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

விவசாயிகளின் இந்த இரயில் மறியல் போராட்டத்தினால் திருச்சி சந்திப்பு இரயில் நிலையம் பரப்புடன் காணப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios