பெண் ஊராட்சித் தலைவர் திடீர் மாயம்..! எங்கே சென்றார்.? கடத்தியது யார்- காவல் நிலையத்தில் கணவர் பரபரப்பு புகார்
ஊர் மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பட்டியலின பெண் ஊராட்சித் தலைவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லையென அவரது கணவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி வெற்றி
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது தொகுதி சீரமைப்பின் படி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள நாயக்கனூர் மலைகிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிரிப்பு தெரிவித்தனர். குறிப்பாக நாயக்கனூர் மலைகிராம ஊராட்சியில் முழுக்க முழுக்க பழங்குடியின மக்களே வசிப்பதால், பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தலை புறக்கணித்தனர்.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள்
அப்போது இந்துமதி என்பவர் ஊர் மக்களின் எதிர்ப்புகளை மீறி தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதன் காரணமாக தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏற்க முடியாமல் இருந்துள்ளார். மாற்று சாதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர் பதவி ஏற்க முடியாத சூழல் இருந்து வந்துள்ளது. கிராம மக்களின் உத்தரவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டதால் இந்துமதி மற்றும் அவரது கணவர் பாண்டியனை ஊரை விட்டும் ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊருக்கு வெளியே தங்கியுள்ளனர். இந்த பிரச்சனை தொடர்பாக பல்வேறு புகார்களையும் காவல் துறையிடம் அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்துமதி கடந்த 9ஆம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என்று அவரது கணவர் பாண்டியன் தற்போது ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
பெண் ஊராட்சி மன்ற தலைவர் மாயம்
அதில் கடந்த 9ஆம் தேதி மாலை பால் வாங்கி வருவதாக சென்ற இந்துமதியை காணவில்லை எனவும், எங்கு தேடியும் அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் புகாரில் கூறியுள்ளார். தனது மனைவி காணாமல் போனது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 6 பேர் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் கூறியுள்ளார். இந்த நிலையில் புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து தடுத்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்து உதயநிதி மீண்டும் கலாய்!