திருச்சி,
சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் இரயில் மறியலில் ஈடுபடுவதால், பயணிகள் இரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சில இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
“சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தொடர்ந்து மதுரை - விழுப்புரம் பயணிகள் இரயில் இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை - திண்டுக்கல் இடையே இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் இராமேசுவரம் - மதுரை பயணிகள் ரெயில் மானாமதுரை - மதுரை இடையே இரத்து செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் போராட்டம் காரணமாக இராமேசுவரம் - திருப்பதி விரைவு இரயில், மதுரை, திண்டுக்கல் செல்லாமல் மாற்றுப்பாதையான விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும், புதுச்சேரி - மங்களூரு விரைவு இரயில் விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு வழியாகவும், கன்னியாகுமரி - சென்னை விரைவு இரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும், திருச்செந்தூர் - சென்னை விரைவு இரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும் இயக்கப்பட்டன.
