The AIADMK will have to find the son of the former head of the son and submit it to the lower court - court orders

மதுரை

அதிமுக முன்னாள் மண்டலத் தலைவரின் மகனை கண்டுபிடித்து தருமாறு தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகனைக் கண்டுபிடித்து கீழ்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டம், வண்டியூரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. அதிமுக முன்னாள் மண்டல தலைவர். இவரது மனைவி முனியம்மாள்.

இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “எனது மூத்த மகன் முனியசாமி, ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு காமராஜபுரம் சாலையில் நின்றுக் கொண்டிருந்த சிலர் முனியசாமியை கொன்றுவிட்டதாகவும், அவரது உடலை அள்ளிக் கொள்ளுங்கள் என்றும் உரக்கக் கத்தினர். அதன்பிறகு எனது மகன் முனியசாமியை காணவில்லை.

இதனையடுத்து அவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், காவலாளர்கள் புகாரை விசாரிக்க மறுக்கின்றனர். எனவே, எனது மகனைக் கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, “மனுதாரர் புகார் குறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்” என்றார்.

இதனையடுத்து, “மனுதாரர் புகார் குறித்த விசாரணையை மாநகர காவல் ஆணையர் கண்காணிக்க வேண்டும். மனுதாரர் மகனைக் கண்டுபிடித்தால் கீழ்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.