அமலாக்கத்துறை சட்டத்தை மீறி இருந்தால் அதிகாரிகளை கூண்டில் ஏற்றி இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்- நீதிபதி
கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை வழங்கிய போது அதை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் பொக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அமலாக்கத்துறையினர் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி இருந்த நிலையில் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் ஆட்கொணர்வு மனுவில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும் எனவும் வாதிட்டார். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம் எனவும் விளக்கினார்.
ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது எனவும், ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும் எனவும், நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு ஏதேனும் தடை இருந்ததா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், எந்த தடையும் இல்லை. மருத்துவர்களே விசாரணை நடத்த அனுமதித்ததாக அமலாக்கத் துறை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது என்றார். ஆரம்பம் முதல் அமலாக்கத் துறை அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும், சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல கருதி செயல்பட்டுள்ளதாகவும் கூறிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது எனக் கூறி, தனது வாதத்தை நிறைவு செய்தார்.
கைது- அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து
தொடர்ந்து ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது எனத் தெரிவித்துள்ளனர். கைது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து அதை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டால், அது சட்டவிரோதம் என்றார். செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின், நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை நிராகரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதியின் நடைமுறை சரியானதல்ல என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை வழங்கிய போது அதை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, கைது நடவடிக்கை சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டிருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள் மின்னஞ்சலில் அனுப்பிய பிறகு திருத்தப்பட்டுள்ளன எனவும், இது முறைகேடு என வாதிட்டார். மேகலா தரப்பு வாதம் முடிவடையாததை அடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதி கார்த்திகேயன் நாளைக்கு தள்ளிவைத்தார்,
இதையும் படியுங்கள்