ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: தங்கம் தென்னரசு - நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு இடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் சந்தித்தார்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும், ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் ஜிஎஸ்டியை வெற்றிகரமாக செயல்படுத்தியதைக் கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி நாள் 2023 கொண்டாடப்பட்ட நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்ம் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!
இந்த கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகள் மீதான வரிவிதிப்பு, பயன்பாட்டு வாகனங்களை வரையறுத்தல் மற்றும் உள்ளீட்டு வரிக் கடன் (ITC) பதிவு மற்றும் கோருவதற்கான விதிமுறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. மல்டிபிளக்ஸ்களில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள், டினுடக்சிமாப் என்ற புற்றுநோய் மருந்தின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி விலக்கு, அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்கான உணவு (FSMP) ஆகியவை குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் தெளிவுபடுத்த வாய்ப்புள்ளது.
மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் விற்கப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது, எஸ்யுவி கார்களை போன்றே எம்யுவி வாகனங்களுக்கும் 22 சதவீதம் செஸ் வரி விதிப்பது, இந்திய விண்வெளித் துறையில் தனியாா் நிறுவன பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், அந்த நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதல சேவைக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு வழங்குவது உள்ளிட்டவைகள் குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாநில நிதியமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் நிதியமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற தங்கம் தென்னரசுவும் டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசப்படவுள்ள விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.