சென்னை, பெங்களூரு, டெல்லி நகரங்களில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி வேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக, கூறப்படுகிறது. இதனால் மாநில அரசுகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த மாதம் 18ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 இந்திய ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேர், சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 28ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்த இந்திய ராணுவம் மறுநாள் விடியற்காலை வரை 4 மணி நேரம் 7 தீவிரவாதிகள் முகாம்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 40க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ராணுவத்தின் இந்த தாக்குதலால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் செயல்படும் லஷ்கர் இ–தொய்பா, ஜெய்ஷ் இ–முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட் தீவிரவாதி அமைப்புகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன. இந்த தாக்குதலை ஜீரணிக்க முடியாத தீவிரவாதிகள், இந்தியாவுக்குள் புகுந்து முக்கிய நகரங்களில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு சபதம் எடுத்து கொண்டுள்ளனா.

குறிப்பாக கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட சம்பவம் காரணமாக தப்பிச் சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள ஜெய்ஷ் இ–முகமது இயக்கத்தின் தலைவனான மவுலானா மசூத் அசார், இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.

இதேபோல் ராணுவத்தின் தாக்குதலில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான லஷ்கர் இ– தொய்பா தீவிரவாத அமைப்பும் இந்தியாவில் தாக்குதலில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே காஷ்மீர் வழியாக தீவிரவாதிகள் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் மேலும் 250 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக காஷ்மீர் எல்லையில் காத்து இருப்பதாகவும், இவர்கள் எல்லையோர படைகள் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே ஊடுருவிய தீவிரவாதிகள் சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் தாக்குதலில் ஈடுபடலாம் என்றும் கருதப்படுகிறது. இது பண்டிகை காலம் என்பதால் தீவிரவாதிகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு குறி வைக்கலாம் எனவும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் உளவுத்துறை எச்சரித்து உள்ளது.

அனைத்து மாநிலங்களும் பண்டிகை கால கொண்டாட்டங்கள் முடியும்வரை மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும், வழிபாட்டுத் தலங்கள், சிலைகள் கரைக்கும் இடங்கள், ரயில்,பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், பதற்றமான பகுதிகள், பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம், டெல்லி தலைமை செயலகம், தாமரைக் கோவில், அக்ஷர்தாம் கோவில், லட்சுமி நாராயணன் கோவில் மற்றும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த குறி வைக்கலாம் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தொடர்ந்து, டெல்லி போலீசார், மத்திய ரிசர்வ் படை போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியோருக்கு தசரா, மொகரம் பண்டிகைகளின்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் டெல்லி நகரம் மற்றும் அதன் எல்லைப் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் உளவுத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நேற்று பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்துவது, முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது, பதற்றமான இடங்களில் அதிக அளவில் போலீசாரை குவித்து கண்காணிப்பில் ஈடுபடுத்துவது ஆகியவை தொடர்பாக அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.