Tenth grade student tukkuppottu suicide What is the reason Serious investigation
பாலக்கோடு
தருமபுரியில், இரவு படித்துவிட்டு தூங்கச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் காலையில் அவரது தந்தை பார்த்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் பந்தாரஅள்ளி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அமுதவள்ளி. இவர்களுக்கு குருபிரசாத் (15) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர்.
அமுதவள்ளி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் விவேகானந்தன் இலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர் வீராசானூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
மாணவன் குருபிரசாத் பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10–ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு மாணவன் வீட்டில் படித்து விட்டு அறையில் தூங்கச் சென்றான். அதிகாலை மகனை படிக்க எழுப்புவதற்காக விவேகானந்தன் அறைக்கதவை திறந்துள்ளார். அப்போது மாணவன் குருபிரசாத் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே மகனை மீட்டு பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அப்போது மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் காவலாளர்கள் மருத்துவமனைக்குச் சென்று மாணவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். தேர்வில் தோல்வியா? அல்லது வேறேதும் பிரச்சனையால் மாணவன் தற்கொலைச் செய்து கொண்டாரா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டுத் தற்கொலைச் செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
