வேலூர்

வேலூரில் மகளுடன் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (36). தொழிலாளியான இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு அதே பகுதியில் தனது மகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்  பேர்ணாம்பட்டு காவலாளர்கள் வழக்குப் பதிந்து ஜெயராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுசூதனன், குற்றம் சாட்டப்பட்ட ஜெயராஜுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று அதிரடி தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட ஜெயராஜ், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மகளுடன் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை மகளாக பார்க்காமல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இதுபோன்ற கொடூர குணம் படைத்தவர்களுக்கு இந்த தண்டனை போதாது என்று நீதிமன்ற வளாகத்தில் இருந்த மக்கள் பேசிக் கொண்டனர்.