வேலூர்

வேலூரில் வாய்பேச முடியாத பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே அமலேசபுரம், சடேரி காலனியைச் சேர்ந்தவர் வினோத் (26). கட்டடத் தொழிலாளி.

இவர், வேலூர்பேட்டை கிராமத்தில் கடந்த 2011 செப்டம்பர் 5-ஆம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 33 வயது திருமணமான, வாய்பேச முடியாத பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து செய்து வினோத்தை அதிரடியாக கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி மதுசூதனன், குற்றம்சாட்டப்பட்ட வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

பின்னர், தண்டனை விதிக்கப்பட்ட வினோத், வேலூர் மத்திய சிறையில் காவலாளர்களால் அடைக்கப்பட்டார்.