customer held in protest front of bank
ஆரணி
வங்கியில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்ததால் வாடிக்கையாளர்கள் வங்கி முன் தான் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8–ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு ஊர்களில் கடைக்காரர்கள் 10 ரூபாய் நாணயமும் செல்லாது எனக்கூறி அவற்றை வாங்க மறுத்து வருகின்றனர். 10 ரூபாய் நாணயம் கிடைப்பது அரிது என கருதி பல்வேறு தரப்பினர் அதனை சேமித்து வைத்தனர்.
இந்த நிலையில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என பரப்பப்பட்ட செய்தியால் தங்களிடம் உள்ள நாணயத்தை மாற்ற முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ‘‘10 ரூபாய் நாணயங்கள் செல்லும்” என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான சில்லரை வர்த்தக நிறுவனங்களில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் அவலூர்பேட்டையைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான முருகையன் என்பவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்து கடன் உதவி பெற்றுள்ளார்.
அந்த கடனுக்கு ரூ.9 ஆயிரத்து 610 வட்டி செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் தகவல் அனுப்பியது. சம்பந்தப்பட்ட வங்கியில் ‘கோர்பேங்கிங்’ வசதி உள்ளதால் எந்த கிளையில் வேண்டுமானாலும் பணத்தை செலுத்தலாம்.
அதன்படி முருகையன் 9 ஆயிரத்து 610–க்கான பணத்தை 10 நாணயங்களாக ஆரணி தச்சூர் சாலையில் அதே வங்கியின் கிளையில் செலுத்துவதற்காக வந்தார்.
நாணயங்களை பார்த்ததும் அவற்றை வாங்க முடியாது என காசாளர் மறுத்துள்ளார். அங்குள்ள அதிகாரிகளும் நாணயங்களை வாங்க மறுத்தனர். ‘’10 ரூபாய் நாணயம் செல்லும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் நாளை எனது கணக்கில் வட்டி சேர்ந்துவிடும், என்னால் பணம் செலுத்த முடியாது’’ என்றார். அதன்பின்னரும் வங்கி அதிகாரிகள் நாணயங்களை வாங்கவில்லை.
பின்னர் வெளியே வந்த முருகையன் தான் கொண்டு வந்திருந்த 10 ரூபாய் நாணயங்களை வங்கி முன்பு கொட்டிவிட்டு, தனது நண்பர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி நகர காவலாளர்கள் வங்கி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவரை அழைத்து வங்கியில் சில்லரை நாணயங்களை பெற்றுக் கொள்ளவதாக அறிவித்தனர்.
நாணயங்களை பெற்றுக் கொண்ட பின்னரே, போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
