மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிவன் கோயில்களில் தொடர்ந்து தீ விபத்து நிகழ்ந்து வருவது பக்தர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. விபத்து குறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீணை அணைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் கட்டப்பட்ட தூண்களுக்கும், ஆயிரங்கால் மண்டபம் சேதமடைந்தது.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோயில் தல மரம் தீப்பற்றி எரிந்தது. இந்த நிலையில், கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுவாமி அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த துணிகள் முற்றிலும் எரிந்துபோயின. தீ பற்றியதைப் பார்த்த ஆலய ஊழியர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் வழியில் கோயிலுக்கு செல்ல அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத் தூண் மீது லாரி மோதியுள்ளது. இதில் மண்டப தூண் இரண்டு துண்டுகளாக இடிந்துள்ளது. இதனைப் பார்த்த பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். கோயில்களில் அடுத்தடுத்து விபத்துகள் நடைபெறுவதால் பக்தர்கள் அச்சமும் வேதனையும் அடைந்துள்ளனர்.