கோடநாடு கொலை தொடர்பாக ஆவண படம் வெளியிட்ட மாத்யூ சாமுவேலை கைது செய்ய தமிழக போலீஸ் தயங்குவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்டவர் பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல். இந்த ஆவணப்படத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கும் சயன் மற்றும் மனோஜ் பேசியுள்ளனர். 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளைகள் அரங்கேற்றப்பட்டதே எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் என்று கார் ஓட்டுனர் கனகராஜ் கூறியதாக சயன் மற்றும் மனோஜ் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆவணப்படத்தில் பேசியதோடு மட்டும் அல்லாமல் மனோஜ் மற்றும் சயன் பேட்டியும் அளித்தனர். இதனால் அவர்கள் மீது மட்டும் அல்லாமல் பத்திரிகையாளர் சயன் மீதும் மத்திய குற்றப்பிரிவில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக போலீஸ் மனோஜ் மற்றும் சயனை கைத செய்தது. ஆனால் மாத்யூ சாமுவேல் கைது செய்யப்படவில்லை. அதே சமயம் செய்தியாளர்களை சந்தித்த மாத்யூ சாமுவேல் முதலமைச்சருக்கு எதிராக கடுமையான புகார்களை கூறினார். இந்த நிலையில் சென்னைக்கே வந்த மாத்யூ சாமுவேல் செய்தியாளர்களை சந்தித்து அடுத்தடுத்த அணு குண்டுகளை வீசினார். கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரியின் பேட்டியே தன்னிடம் உள்ளதாக கூறி மாத்யூ அதிர வைத்தார். அந்த போலீஸ் அதிகாரி கேட்டுக் கொண்டதால் தற்போது அந்த பேட்டியை தான் வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேலுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் மாத்யூ சாமுவேல் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று எடப்பாடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் சயன் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்ட நிலையில் மாத்யூ சாமுவேல் மட்டும் கைது செய்யப்படவில்லை.

 

சயன் மற்றும் மனோஜை தேடி டெல்லி சென்ற போலீசார் மாத்யூ சென்னை வந்த போதும் அவரை விசாரணைக்கு கூட அழைத்துச் செல்லவில்லை. இதற்கெல்லாம் காரணம் கோடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரியின் பேட்டியே தன்னிடம் உள்ளது என்று மாத்யூ கூறியது தான் என்கிறார்கள். இந்த விஷயத்தை ஏற்கனவே மோப்பம் பிடித்த அதிகாரிகள் மாத்யூவை கைது செய்தால் அந்த வீடியோவும் வெளியாகும் என்பதால் தான் அவர் விஷயத்தில் போலீசார் உஷாராக இருப்பதாக கூறுகிறார்கள்.