Teachers wait for teachers to pay parallel to federal teachers

நீலகிரி

"மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைப்பெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் துணை தலைவர் பிங்க் ஆப் டாரஸ் தலைமை தாங்கினார்.

வட்டாரத் தலைவர் சரவணன் வரவேற்றார். துணை செயலாளர் ஜெயஷீலன், மாவட்ட தலைவர் தினகரன், வட்டார செயலாளர் கருணாநிதி, சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை மாவட்ட செயலாளர் பத்மநாபன் தொடங்கி வைத்தார்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி சலீம், வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகி ஜான்மனோகர், ராஜகோபால் ஆகியோர் பேசினர்.

"மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பி.எட்., பி.காம்., பி.ஏ., உயர் கல்வி தகுதிக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியத்தை தொடக்க கல்வி இயக்குனர் தனது செயல்முறை ஆணை மூலம் நிறுத்தி வைத்துள்ளதை திரும்ப பெற வேண்டும்.

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில துறை ரீதியாக அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் முன் அனுமதி வழங்கப்பட வில்லை.

மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் வெயிட்டேஜ் முறையால் மூத்தோர்களின் பணி நியமனம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே வெயிட்டேஜ் முறையை மாற்றி அமைத்து மூத்தோர்களின் முதுநிலைக்கு முன்னுரிமை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிக்கூடங்களுக்கு இன்றைய தேவையை கருத்தில் கொண்டு இணையதள வசதியுடன் கணினிகள் வழங்கி அதை இயக்குவதற்கு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்" உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர். போராட்டத்தின் இறுதியில்பொருளாளர் நதீரா நன்றித் தெரிவித்தார்.